"டிஐஜி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை" - ராமதாஸ்

 
PMK

கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த விஜயகுமார் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,  கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த விஜயகுமார்  இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

விஜயகுமார் திறமையான காவல்துறை அதிகாரி. மிகவும் நேர்மையானவர். காவல்பணியை நேசித்தவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணி தேர்வுகளை தமிழில் எழுதி இ.கா.ப அதிகாரி ஆனவர். விஜயகுமாரின் சிறப்பான பணியைக் கண்டு, அவரை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர்.


பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பொதுவாகவே காவல் பணி என்பது மன அழுத்தத்தை  ஏற்படுத்தக் கூடியது தான். காவல் அதிகாரிகள் மன அழுத்தத்தை வென்றெடுக்க வேண்டுமே தவிர, அதற்கு இரையாகி விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார் .