திமுக என்ற ஆலமரத்தை அறுக்க வந்த பிளேடு தான் தமிழக வெற்றிக் கழகம்- திண்டுக்கல் ஐ.லியோனி
திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோயில் தெருவில் ஆர்கேநகர் எம்எல்ஏ எபினேசர் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் லியோனி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய ஐ.லியோனி, “நேருக்கு நேர் தமிழக முதலமைச்சர் என்னுடன் பேசத் தயாராக என எடப்பாடி பழனிசாமி சவால் விட்டு உள்ளார். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான் வேண்டுமானாலும் வருகிறேன் என்று கூறினார். ஆனால் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், முதலமைச்சர் போக வேண்டாம்... துணை முதலமைச்சர் போக வேண்டாம்... நான் இருக்கேன் எடப்பாடி பழனிச்சாமியை அவரது ஊரான எடப்பாடியில் மேடை போட்டு பேசுவோமா? ஆர்கே நகரில் எடப்பாடிக்கு சவால் விடுகிறேன். எடப்பாடி ஊரில் மேடை போட்டு திமுகவுடைய சாதனை, அதிமுக சாதனை என்ன என்று பேச தயாரா? மக்கள் யாருக்கு கைதட்டி அதிகமாக ஓட்டு போடுகிறார் என்பதை இப்போது தீர்மானிக்கலாமா?
உலகமே பாராட்டக்கூடிய அளவிற்கு இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மூட நம்பிக்கையும் பெண் அடிமைக்கும் எதிராக முதன் முதலாக குரல் கொடுத்த இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின். விஜய் மாநாட்டில் ஓடி வந்த விஜய்க்கு கூட்டத்தினர் கட்சித் துண்டை வீசினர். இவரும் அதை கூட்டத்தில் வீசினார். ஆனால் அதைக்கூட கவனிக்காமல் பின்னால் வந்தவர்கள் அதை மிதித்து கொண்டு வந்தார்கள். முதல் மாநாட்டிலேயே கட்சி துண்டு பலரால் மிதிபட்டது கூட கவனிக்காமல் நடக்கிறது இது எல்லாம் மாநாடா? சென்னை கோட்டை வரைந்து அந்த கோட்டைகள் ஓடுகிறார். அந்த டுபாக்கூர் பொம்மை கோட்டைக்குள் ஓடுவதற்கே 800 மீட்டர் ஓட வேண்டி இருந்தது. சார்ஜ் கோட்டை பிடிப்பதற்கு எத்தனை மீட்டர் தூரம் ஓட வேண்டும். எவன் நீண்ட தூரம் ஓடி வருகின்றானோ... அவனால் தான் உயரத்தை தாண்ட முடியும் என்று சொன்னவர் கலைஞர்! யார் நீண்ட தூரம் ஓடி வருகின்றானோ, அதிக நீளத்தை தாண்ட முடியும்.
ஒடுக்கப்பட்ட மக்களை உரிமையை ஒடுக்குவதற்காகவும் அவர்களின் நசுக்குவதற்காகவும் பாடுபட்டவர் டாக்டர் அம்பேத்கார். ஒடுக்கப்பட்டமக்களை மேலும் ஒடுக்க பாடுபட்டவர் அம்பேத்காரா? இதிலிருந்து மனப்பாடம் செய்து விஜய் ஒப்பிக்கிறார் என்று தெரிகிறது. திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் நீங்கள். ஏற்கனவே 20 பிளேடுகள் வந்து, அதில் நான்கு துருப்பிடித்து கிடக்கின்றன. சில பிளேடுகள் மரத்தோடு ஒட்டி கிடக்கிறது. சில பிளேடுகள் எதற்கு வந்தோம் என்று தெரியாமல் அனாதையாக கிடக்கிறது. 21வது பிளேடு தான் தம்பி விஜய்... திமுக என்ற ஆலமரத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது” என்றார்.