அதிமுகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை- திண்டுக்கல் சீனிவாசன்
தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்குவதை நிறுத்த முயற்சி செய்வதை கண்டித்தும் திண்டுக்கல் மணிக்கூண்டில் இன்று 23.07.24 அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுக ஆட்சியில் மத்திய அரசாங்கம் கூறியதை ஏற்காமல் 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் 24 மணி நேரமும் மின்சாரம் கொடுத்தது அதிமுக. மக்களை ஏமாற்றும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி. விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல், சட்ட ஒழுங்கு சீர்கேட்டு, மக்களை கொடுமை படுத்துவது ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இது மாபெரும் கொடூர செயல். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அனைத்து காவல்துறையினரும் ஸ்டாலின் தலைமையின் கீழ் இயங்குகின்றனர். ஸ்டாலின் கூறுவதை மட்டுமே கேட்பார்கள். எனவே கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை. அதனை அழுத்தமாக கூறுவோம். நாடாளுமன்றத்தில் எங்களது ராஜ்யசபா உறுப்பினர்களை கொண்டு அங்கும் அழுத்தம் கொடுப்போம். பொதுக்குழுவை கூட்டி சசிகலா, ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியவர்களை கட்சியில் இருந்து நீக்கி உள்ளோம். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கின்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.