"கோடநாடு வழக்கில் ஈபிஎஸ் A1 குற்றவாளியாக இருந்தால் பிடிச்சி சிறையில் அடையுங்கள்"- திண்டுக்கல் சீனிவாசன்

 
திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சீனிவாசன்

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை இப்பவே பிடித்து உள்ளே போடுங்கள் நாங்களா வேண்டாம் என்கிறோம், கோடநாடு வழக்கில் சட்டத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி குற்றவாளியாக இருந்தால் காவல்துறை கைது செய்திருக்கலாமே என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் சீனிவாசன்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சிலைக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசத்தை குருபூஜை விழாவிற்காக மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது, விழா நிறைவுற்றதை எடுத்து தங்க கவசத்தை மீண்டும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஒப்படைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், “திமுகவின் பீ டீம் யார் என்பதை எடப்பாடி பழனிச்சாமி ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும், வழக்கு தொடர்வதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது, ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துரோகி டிடிவி தினகரன், அவர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பாக பிறந்துள்ளவர் எனும் ஒரு தகுதியை மட்டும் செங்கோட்டையன் பெற்றுள்ளார். அந்த தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார். இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி இருந்துள்ளார்.

செங்கோட்டையனுக்கு முதல்வர் வாய்ப்பு 2 முறை வந்தால் விட்டு கொடுத்து இருப்பாரா? வாய்ப்பு வந்தால் ஏன் விட்டுக் கொடுத்தார்?, வாய்ப்பு வந்தால் யாராவது முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார்களா? பிக்பாக்கெட் அடிப்பது போல் முதல்வர் பதவியை அடித்து விடுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவதற்கு யாரும் பின்புலத்தில் இல்லை, ஜெயலலிதா இருக்கும்போது முதலமைச்சராக வரவேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டதை அதிமுக நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் தெரிவித்ததால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை இப்பவே பிடித்து உள்ளே போடுங்கள் நாங்களா வேண்டாம் என்கிறோம், கோடநாடு வழக்கில் சட்டத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி குற்றவாளியாக இருந்தால் காவல்துறை கைது செய்திருக்கலாமே? திமுகவுக்கு திராணி இருந்தால் 5 ஆண்டுகளில் இதை செய்திருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பினார்.