தண்டவாளத்தில் விரிசல்...உடனடியாக நிறுத்தப்பட்ட ரயில்...திண்டிவனம் அருகே பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் ரயில் சென்றுகொண்டிருந்த போது தண்டவாளத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சத்தம் வந்துள்ளது. இதனை சுதாரித்துக்கொண்ட லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்திவிட்டு தண்டவாளத்தை சோதனை செய்த போது தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடீயாக லோகோ பைலட் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்தனர். மேலும் தண்டவாளத்தை சரி செய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக ஒரு மணி நேரமாக அந்த மார்க்கமாக செல்லும் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


