"நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!!
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. உழவர்கள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஒரே ஒரு கொள்முதல் நிலையம் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கிறது. பிற காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்றும், பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை என்று உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் மிகக்குறைந்த அளவில் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலும் குவித்து வைத்துக் கொண்டு எப்போது அவற்றை விற்க முடியுமோ? என்ற ஏக்கத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் ஒரு மூட்டைக்கு ரூ.40 வீதம் கட்டாயக் கையூட்டு பெறப்படுகிறது. உழவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்களில் இது குறித்து புகார் அளித்தும் கூட எந்தப் பயனும் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
காவிரிப் பாசன மாவட்டங்கள் மற்றும் கடலூரில் நெல்லுடன் உழவர்கள் தவிப்பு: நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 24, 2024
தஞ்ஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி…
காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் உழவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் அதே நாளில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும். உழவர்களிடம் கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று குறிப்பிட்டுள்ளார்.