பண்ருட்டி அருகே கோயிலில் சுரங்க வழி கண்டுபிடிப்பு
பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் சுவாமி கோவில் திருப்பணியின் போது சுரங்க வழி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீமீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி அர்த்தம் மண்டபம் பகுதியில் கருங்கற்காளால் தரை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதற்காக ஏற்கனவே இருந்த கருங்கற்களை அகற்றப்பட்டபோது கோவிலில் சுரங்க வழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மூடிய கிடந்ததால் சுரங்க வழியில் விஷவாயு ஆபத்து இருக்கும் என்பதால், கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க வழியை மேலும் திறக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கோவிலில் நடுவீரப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் சுரங்க வழியை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு சுரங்க பாதையில் பொக்கிஷ அறை ஏதேனும் உள்ளதா என்கிற தகவல் தெரிய வரும். கோவில் திருப்பணியின் போது சுரங்க வழி கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கோவிலில் குவிந்துள்ளனர்.