வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்- முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

 
ration shop ration shop

புதுச்சேரியில் ரேஷன்கடை இல்லாத பகுதிகளில் வேன் மூலம் இலவச அரிசி விநியோகம் செய்யப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

CM Rangasamy


புதுச்சேரி சட்டசபையில் கேள்விநேரத்தின்போது பாஜக எம்.எல்.ஏ. ரிச்சர்டு, குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் மக்களுக்கு மாதந்தோறும் அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் பல பகுதிகளில் ரேஷன்கடைகளே இல்லை. சில பகுதிகளில் தற்காலிக இடங்களில் ரேஷன்கடைகள் செயல்படுகிறது. நகர பகுதியில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்தான் வாடகை நிர்ணயித்துள்ளனர். முன்பணம் வழங்கவும் அரசு தயாராக இல்லாததால், வாடகை இடம் தர யாரும் முன்வருவதில்லை. வாடகை தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் திருமுருகன், சில பகுதிகளில் ரேஷன்கடைகள் இல்லை என்பது உண்மைதான். வணிக வாடகை தொகை உயர்ந்துள்ளது. இதனால் அருகில் உள்ள கடையோடு இணைத்து இயக்க முயற்சித்துவருகிறோம். சமுதாய கூடம், கோவில்வளாகத்தில் ரேஷன்கடை அமைத்துள்ளோம். வாடகை சிரமங்களை தீர்க்கவும், அனைத்து இடங்களிலும் ரேஷன்கடைகளை திறக்கவும் சங்கத்திற்கு கையாளும் கட்டணம், சில்லரை கமிஷனை கிலோவுக்கு 90 பைசாவிலிருந்து ரூ.1.80 ஆக உயர்த்தியுள்ளோம். ஏப்ரல் முதல் மானியம் உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்படும். அப்போது உறுப்பினர்கள் நாஜிம், அங்காளன், வெங்கடேசன் ஆகியோர், ரேஷன்கடைகளில் 10 சதவீதத்தினருக்கு அரிசி கிடைக்காமல்போகிறது. சிகப்பு கார்டிலிருந்து, மஞ்சள் கார்டாக மாற்றப்பட்டவர்களுக்கு உடனடியாக அரிசி கிடைப்பதில்லை. இதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ration shop


இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,  சில இடங்களில் ரேஷன் கடை இல்லை என்பது சரி தான். இதனால் ரேஷன்கடை இல்லாத பகுதிகளில் வேன் மூலம் அரிசி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ரேஷன்கடை ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் ரூ.ஒரு கோடி வழங்கியுள்ளோம். கமிஷன் தொகையையும் உயர்த்தியுள்ளோம். ஓரிரு மாதங்களில் பிரச்சினைகள் அனைத்தும் சீர் செய்யப்படும். குறுகிய காலத்தில் கார்டை மாற்றியவர்களுக்கும் அரிசி வழங்கப்படும் என்றார்.