மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. அப்போ ஏற்கனவே இருக்கும் கலெக்டர்கள்?
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்டம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. இதனையொட்டி சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், “சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள். மாதம் ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.