மேகதாது அணை தமிழகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்- கர்நாடக துணை முதல்வர்
மேகதாது அணை கர்நாடகாவைக் காட்டிலும் தமிழகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வரும் நீர் பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், “காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 50,000 கன அடி நீர் அணைகளுக்கு நீர்வரத்தாக வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஹாரங்கி அணையில் இருந்து மட்டும் சுமார் 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்காகத்தான் மேகதாது அணை வேண்டும் என நாங்கள் கேட்கிறோம்.
எங்களுடைய ஒரே வேண்டுகோள் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேகதாது அணை கர்நாடகாவைக் காட்டிலும் தமிழகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. இரு மாநிலங்களின் செழிப்புக்கு அணைக்கட்டும் நடவடிக்கை மிக அவசியம். எனவே, தமிழகம் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மேகதாதுவின் கட்டுமானத்திற்கு பச்சைக்கொடி காட்டி, இப்பகுதியின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை அளித்து புதிய அத்தியாயத்தை படைக்கும் என நம்புகிறேன்” என்றார்.