நீட் தேர்வு- திமுக மாணவர்களை குழப்புகிறது; இதுவே தற்கொலைக்கு காரணம்- பிரேமலதா
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கபட்டினம் அடுத்த மெய்யூரில் தேமுதிகவின் கல்வெட்டை திறந்தவைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் தாக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவில்தான் தெரியும் என தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கட்சியின் 71 அடி கொடிமரத்தில் கொடியை ஏற்றிவைத்து, கல்வெட்டை திறந்துவைத்தார்.பின்னர் பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை செய்தார் இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் ஒன்றிய செயலாளர் சேஷாத்திரி மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலா விஜயகாந்த், “தேமுதிகவை பொறுத்தவரையில் நீட் தேர்வு தேவையில்லாதது என்பதுதான். திமுக மாணவர்களை குழப்புகிறது. இதனால், ஏற்படும் குழப்பம் காரணமாக மாணவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விளக்கு அளிப்பது தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உள்ளது. குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு வருவது தவறான செயல். மாணவர்களின் தற்கொலை இதற்கு தீர்வாகது. இந்த மனநிலையில் இருந்து மாற வேண்டும். மாணவர்களை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வு காரணமாக அனிதா என்ற மாணவி உயிரிழந்த போது மயானத்துக்கு நேரில் சென்று முதலில் அஞ்சலி செலுத்தியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நாடாளுமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் நடைப்பயணம் புதிதல்ல. நான் வரும்போது கூட சாலையில் பார்த்தேன். ஏராளமான நபர்கள் வேளாங்கண்ணி மாதக்கோயிலுக்கு நடைபயணமாக சென்றுக்கொண்டிருந்தனர். பாஜக சார்பில் முதன்முறையாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தாக்கம், நாடாளுமன்ற தேர்தல் முடிவிலேயே தெரியும். அதேநேரத்தில் அண்ணாமலைக்கு சர்க்கரைநோய் இருந்தாலும் சரியாகிவிடும்” என விமர்சித்தார்.