அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி - திமுக அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் - தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் - "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் - "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை “தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் - சுயமரியாதை சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் எழுத்து வேந்தர் தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாளினையொட்டி, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி -3, சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.
கழக இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி விவசாய அணி விவசாயத் தொழிலாளர் அணி, ஆதிதிராவிடர் நல உரிமைப் பிரிவு, மீனவர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ
அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி. விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணியினரும் அண்ணன் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக்
கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.