வாக்கு திருட்டுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம்..!!

 
dmk dmk

வாக்கு திருட்டுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் 
சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத்திருட்டு” மற்றும் “SIR” (பீகார் சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், “

 தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் - அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே “Mass deletion” இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

dmk

குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்தும், அகில இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் “வாக்குத் திருட்டை” எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களைத் தடுத்து நிறுத்திய - அவர்கள் மீது FIR பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு ஆணவப் போக்கை கடைப்பிடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து  இம்மாவட்டச்  செயலாளர்கள் கூட்டம்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று கூறப்பட்டது.