தொடர் மழையால் அடைபட்ட கழிவுநீர் கால்வாய்- சுத்தம் செய்த திமுக கவுன்சிலரின் கணவர்
ஆரணி நகராட்சி 24-வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 24-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சார்ந்த கவுன்சிலர் ரேணுகா தயாளன் என்கின்ற பெண் கவுன்சிலர் பதவி வகித்து வருகிறார். தற்பொழுது கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். 24வது வார்டு பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் ரேணுகா தயாளனிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் வார்டு உறுப்பினரின் கணவர் தயாளன் தானாக முன்வந்து கழிவு நீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்ய தொடங்கினார். அதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களும் கால்வாயில் இறங்கி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய தொடங்கினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துப்புரவு பணியாளர்களை எதிர்பார்க்காமல் தாமாக முன்வந்து மக்கள் பணி செய்கின்ற திமுக கவுன்சிலிங் கணவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கொள்கின்றன.


