இடைத்தேர்தல் - அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

 
erode

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதியின்றி செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுகவின் 10 பணிமனைளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதேபோல் அதிமுகவின் 4 பணிமனைகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்க வந்த தேர்தல் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.