“இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்காத தாய்மார்களுக்கு ரூ.1,000 கிடைக்கும்”- துரைமுருகன்

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4034 கோடியை வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் 21 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “இது யாருடைய அப்பன் பணமும் கிடையாது சர்கார் பணம்... இதை நிறுத்த காரணம் இந்த திட்டத்தின் பெயர். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம். அது மோடி அரசுக்கு பிடிக்கவில்லை. காந்தியை சுட்டவர்கள் அவர்கள். காந்தியின் பெயரில் இத்திட்டம் இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் பணம் தர மறுக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்காத தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
மோடி பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. பிஜேபி மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது. அந்த அளவுக்கு உங்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள். மோடி அல்ல, அவன் பாட்டன் சொன்னாலும் உங்கள் பணத்தை வாங்கி தராமல் விடமாட்டோம்” என்றார்.