“மாற்றுத்திறனாளிகள் கலைஞரை ROLE MODELஆக எடுத்துச் செயல்பட வேண்டும்”- மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை உறுதி செய்யப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக மாற்றுத்திறனாளிகள் நாளை ஒட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை உறுதி செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர, கருணை அல்ல. மற்ற நாட்களைப் போல் அல்லாமல் இது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பை வழங்கியதை நினைவுகூறும் நாள் இது.
மாற்றுத்திறனாளிகள் கலைஞரை Role Model ஆக எடுத்து செயல்படவேண்டும். ஒரு விபத்தில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை சமூகத்திற்காக உழைத்தார். கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவரது மனதை பாதிக்கவில்லை. முதுமை காலத்தில் சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். அதில் இருந்தபடி, எப்படி பம்பரமாய் சுற்றிசுற்றி உழைத்தார் என உங்களுக்கு தெரியும். இந்த Will Power தான் அரசியலுக்கு அவசியம், மனிதர்களுக்கு அவசியம்” என்றார்.


