காலையில் பட்ஜெட்... மாலையில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை... மு.க.ஸ்டாலின் வழங்கிய முக்கிய அட்வைஸ்

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து பொது விவாதமும் மானிய கோரிக்கைகள் தொடர்பாக துறை ரீதியான விவாதமும் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவாதங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எதிர்கட்சிகள் கேள்விகளை எவ்வாறு எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து பல முக்கிய ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கியதாக தகவல் கூறப்படுகிறது.
ஏற்கனவே செயல்படுத்தபட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்கள் தொகுதிக்கு தேவையானவற்றை முறையாக முன்வைத்து மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமான பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது.