“தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தரமுடியாதுன்னு சொல்ற உரிமை மத்திய அரசுக்கு கிடையாது”- கனிமொழி
தூத்துக்குடி மாநகராட்சி மண்டபத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி கருணாநிதி வியாபாரிகளுக்கு அடையாள அட்டையை வழங்கிய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கனிமொழி எம்.பி., “யாரும் எந்த மொழியும் படிக்கக் கூடாது என திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழக அரசோ தமிழக மக்களுக்கு சொல்லவில்லை. ஒரு மொழி திணிப்பு என்று வரும்போது தான் எதிர்க்கிறோம், அதை புரிந்து கொள்ள வேண்டும். மொழியை ஒரு விருப்ப மொழியாக எடுத்து படிப்பதற்கும் மொழி திணிக்கப்படும் போது வேறு வழியில்லாமல் அதை படிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது ஏற்படக் கூடிய வித்தியாசத்தை பிஜேபியில் இருக்கக்கூடியவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பிஜேபி ஆட்சி வருவதற்கு முன்பாக ஜெர்மன் மொழி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை எடுத்துவிட்டு தற்போது சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது.
சமஸ்கிருதம் படித்து பிள்ளைகளுக்கு என்ன பயன்? மொழி திணிப்பு, ஆதிக்கத் திணிப்பு இவை இவையெல்லாம் ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்த மொழி திணிப்பை இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்.தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தரமுடியாதுன்னு சொல்ற உரிமை மத்திய அரசுக்கு கிடையாது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு.. மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறது” எனக் கூறினார்.


