"பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதை நினைத்து ஈபிஎஸ் வெட்கப்பட வேண்டும்"- கனிமொழி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றியதை எடப்பாடி பழனிசாமி பெருமையாக நினைக்காமல் வெட்கப்பட வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக அரசு பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் இருக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இந்த விவகாரத்தில் முறையாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை. இந்த வழக்கில் அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டதால் பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை செய்து இருந்தால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.
இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் நிலை ஏற்படாத காரணத்தினாலேயே மக்கள் போராட்டம் நடத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது பெருமை என எடப்பாடி பழனிச்சாமி செல்வது வெட்கப்பட வேண்டிய விஷயம். துணைப் பொதுச் செயலாளராக நெல்லை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்” என்றார்.


