“மனிதாபிமானமே இல்லாமல் SIR... பல BLO-க்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்”- கனிமொழி
மனிதாபிமானமே இல்லாமல் எஸ்ஐஆர் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது, எஸ்.ஐ.ஆர் பிரச்சனை எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைக்கு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி வரவில்லை. இதே போல கல்விக்காக வரவேண்டிய பல கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. அதனை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும், அதற்காக ஒரு குழு வந்து பல ஆய்வுகளை செய்துவிட்டு சென்று உள்ளார்கள் ஆனால் தற்போது வரை எந்த பதிலும் இல்லை. மேலும், மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இருக்கக்கூடிய முக்கியமான பல பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக தான் எஸ்ஐஆர் உள்ளது. பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் மிகக் குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக தான் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழல் உள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.
மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும், மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அங்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டு விட்டு, எஸ்.ஐ.ஆர்-இல் கவனம் செலுத்த வேண்டிய பணிகளில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது மக்களைப் பற்றி ஒரு அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் அதுவும் குறுகிய நேரத்தில் போதிய அவகாசம் தராமல் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.


