“பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத மோசமான காலகட்டத்தில் வாழ்கிறோம்”- கனிமொழி
நாடாளுமன்றத்தில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி தலைமையில் இன்று சேலத்தில் , சேலம் ,நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்கும் கூட்டம் , தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கனிமொழி , திமுக தேர்தல் அறிக்கை என்றால், எல்லாராலும் ஏற்று கெள்ளக்கூடிய வகையில் இருக்கும். கலைஞர் அவர்களின் காலம் தொட்டு தற்போது மு.க.ஸ்டாலின் வரை தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சொல்வதை தான் செய்வோம் , செய்வதைத்தான் சொல்வோம் என்ற தாரக மந்திரத்தோடு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் அந்த வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை முதலமைச்சர் எங்களிடம் வழங்கி உள்ளார் நீங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் பரிசினை செய்யப்பட்டு பின்னர் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டுமோ அதை தேர்தல் அறிக்கையில் சேர்த்து தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் உங்களுக்கு நிறைவேற்றி தருவார் என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி , நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு விசித்திரமான நிலை நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர் , மன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பேச முயற்சித்தும், பேச முடியவில்லை , அமைச்சர்களே தடுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் உரையின் மீது விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், பிரதமர் அவைக்கு வராமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காரணம் கேட்டால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களால் பிரதமர் தாக்கப்படுவார். பிரதமருக்கே நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு இல்லாத மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” எனக் கூறினார்.


