"பாஜகவை எந்த விதத்திலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை"- கனிமொழி எம்பி

 
கனிமொழி கனிமொழி

இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், எங்களை பிரிக்காதீர்கள் என திமுக எம்.பி., கனிமொழி கூறினார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய  திமுக எம்.பி., கனிமொழி, “இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், எங்களை பிரிக்காதீர்கள். விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒன்றிய அரசு என்ன உதவி செய்கிறது?  ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை கண்டறிந்துவிடுகிறது பாஜக. ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தீர்கள் தமிழன் கங்கையை வெல்வான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தீவிரவாத தாக்குதலால், சுற்றுலாவை நம்பி இருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட‌து. மக்களின் பாதுகாப்புக்கு அரசு தான் பொறுப்பு மக்களை அரசு பாதுகாக்காதது ஏன்? சிந்தூர் நடவடிக்கையின் போது, எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவிற்காக துணை நின்றோம். ஆனால் இந்தியாவில் அரசியல் ஏன் பிரித்தாள்வதாக உள்ளது? இந்தியா ஒரே தேசமாக இருக்க வேண்டும். அமித்ஷா, எதிர்க்கட்சிகளுக்கு குறைவான தேசபக்தி இருப்பதுபோல கருத்து தெரிவித்தார். நாங்கள் எந்த நிலையிலும் தேசத்தை விட்டுக்கொடுத்ததில்லை. இந்திய பாதுகாப்புத் துறையை ஆதரித்து முதன்முதலில் பேரணி நடத்திய கட்சி தி.மு.க. பாஜகவை எந்த விதத்திலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. பாஜகவின் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று ட்ரம்ப் 26 முறை கூறிவிட்டார். அவரின் கருத்தை நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்களது வெளியுறவுக் கொள்கையா?” எனக் கேள்வி எழுப்பினார்.