ஆளுநரின் அதிகாரம் என்னவென்று தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது - கனிமொழி

 
kanimozhi kanimozhi

ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். 

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளார். 


இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலை திமுக எம்.பி.கனிமொழி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது.அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு-குறள் 467. கலைஞர் உரை : நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. இவ்வாறு குறிப்பிட்டார்.