"காழ்ப்புணர்ச்சி... வீண்பழிக்கு இடம் வேண்டாம்" - கொலை வழக்கில் சரணடைந்த திமுக எம்பி பரபர அறிக்கை!

 
திமுக எம்பி ரமேஷ்

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை  உள்ளது. இதில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கோவிந்தராசு என்ற ஊழியர்  கடந்த மாதம் 19ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.  இந்த வழக்கு  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல  எம்பி ரமேஷ், தொழிற்சாலையில் பணியாற்றிய நடராஜ், அல்லாபிச்சை, சுந்தர், வினோ, கந்தவேல் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரமேசை தவிர மற்ற ஐவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு பதிவான உடன் ரமேஷ் தலைமறைவானார். 

எம்பி ரமேஷ்

தமிழ்நாடு முதலமைச்சர் ரமேசை கைதுசெய்ய கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால் சிபிசிஐடி போலீஸார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இச்சூழலில் சில மணி நேரங்களுக்கு முன் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இச்சூழலில் இதுதொடர்பாக மௌனம் கலைத்து தான் ஏன் சரணடைந்தேன் என்பதை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னுடைய முந்திரித் தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் திமுகவின் மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றன.

‛காழ்ப்புணர்ச்சி... வெளியே வருவேன்...’ சரணடைந்த திமுக எம்.பி., அறிக்கை வெளியிட்டார்!

இது என் மனதிற்கு நெருடலாகவும் இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது. ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.