முறையற்ற வகையில் திருத்தங்கள் செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது- திமுக குற்றச்சாட்டு

 
dmk dmk

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.

வரும் 26-ஆம் தேதி பயிற்சி கூட்டம்: என்.ஆர்.இளங்கோ, எம்.பி அறிக்கை..! -  Seithipunal

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவினை தந்திருக்கிறோம். அந்த கோரிக்கைகளில் முதலாவதாக, 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பு பிரகாரம் இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும்; இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்தின் நிறைய கையேடு புத்தகங்கள் உள்ளன, அந்த கையேடுகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் உள்ளது. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும் என்ற கோரிக்கையையும்; மூன்றவதாக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாக நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படக்கூடிய பாக நிலை முகவர்களையும் இணைந்து செயலாலற்ற நடைமுறைகளை வகுத்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும்; நான்காவதாக, வாக்குபதிவில் ஏற்பட்டு இருக்க கூடிய சில திருத்தங்கள் முறையற்றது, அந்த முறையற்ற சில திருத்தங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்; ஐந்தாவதாக, எப்படி பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுகிறதோ? அதைபோல் தமிழகத்திலும் நடக்க இருப்பதால், இங்கே ஆதார் எண்ணையும், குடும்ப அட்டையும் ஒரு வாக்காளருடைய அடையாளங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் கேட்டு இருந்தோம்.

இந்த ஐந்தாவதாக உள்ளதைத் தவிர, மற்ற நான்கையும் உடனே பரிசீலித்து ஆவண செய்வதாக தேர்தல் ஆணையம் சொன்னது. ஆனால் இதுவரையில் அந்த வழியில் எந்த ஒரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. எனவே இவற்றையெல்லாம் வலியுறுத்தி இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதற்கு உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பீகார் மாநிலத்தில் நடக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என நாடே பார்த்து கொண்டு இருக்கிறது.  ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழந்து நிற்கிறார்கள். அதற்கு உரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் தர மறுக்கிறது. இந்தியா கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்க கூடிய திமுக, இந்த தேர்தல் ஆணையத்தின் செயலை எதிர்க்கும். எதிர்த்து போராடும். எனினும் கூட தமிழ்நாட்டில் அப்படி ஒரு சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே இங்கே அதுபோன்ற எந்த வாக்குகளையும் நீக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கடமை என்று நினைக்கிறோம். அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.