மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு

 
civil code

பொது சிவில் சட்டம் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி லாபம் காண முயற்சிகள் நடைபெறுகின்றன என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ஆம்.ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். இதனால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி லாபம் காண முயற்சிகள் நடைபெறுகின்றன. நாட்டில் 2 சட்டங்கள் இருக்க கூடாது என்கிறார் பிரதமர் மோடி. மத பிரச்சினைகளை அதிகமாக்கி லாபம் பார்க்க முயற்சிக்கின்றனர். மதத்தை வைத்து பிரதமர் அரசியல் செய்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஆட்சியை மத்தியில் உருவாக்க மக்கள் தயாராக வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.