100 நாள் வேலைக்கு நிதி தராத ஒன்றிய அரசை கண்டித்து 1,170 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதி வழங்கவில்லை என ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 1,170 இடங்களில் 100 நாள் வேலைக்குச் செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் திமுக ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் மத்திய அரசை கண்டித்து 500 க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் அரக்கோணம் அருகே ஆர்ப்பாட்டம் அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பங்கேற்றனர். பொன்னேரி அருகே 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 4000 கோடி ரூபாய் நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணம் அருகே அண்ணலக்கரகாரத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தட்டார்மடம் மெயின் பஜாரில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊராக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 4,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோபி மற்றும் கவுந்தப்பாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ .4034 கோடி, நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் விராலிமலை அடுத்துள்ள ஆம்பூர்பட்டி,கொடும்பாளூர் ஆகிய இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாட்கள் வேலை திட்ட நிதியை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்தும் கல்வி நிதியை தர மறுப்பதை கண்டித்தும் குமரி மாவட்ட திமுக சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதேபோல் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் திமுக சார்பில் 100 நாள் திட்டப் பணியாளர்களுக்கு சம்பளம் தராமல் நிலுவையில் வைத்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.