பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

 
பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.. 


 பட்ஜெட்டில்  தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்  கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.   இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாததற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பிரதமர் மோடி தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார் எனவும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை அமைந்திருக்கிறது எனவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன.  

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.. 

 இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  இதில் ஒவ்வொரு இடங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாலுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வழிநடத்தி வருகின்றனர்.  ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.  

சென்னையில் ஆளுநர் மாளிகை அருகே தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை பாலு, பிரபாகர ராஜா, துணை மேயர் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.