''சிலரின் அஜாக்கிரதையால் மெரினாவில் 5 பேர் உயிரிழப்பு''- ஆர்.எஸ்.பாரதி
வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு ஒரு சிலரின் அஜாக்கிரதையே காரணம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மக்கள் மன்றம் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ரத்தின ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும், திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். இருந்தாலும் தமிழ்நாடு அரசின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி சிலரின் அஜாக்கிரதை காரணமாக இது நிகழ்ந்திருக்கிறது. 15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். முன் கூட்டியே முன்னெச்சரிக்கையும் பொதுமக்களுக்கு தரப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி கூட்டத்தில் 6 பேர் இறந்திருக்கக் கூடிய செய்தி இருக்கிறது. அதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி மறந்துவிடக்கூடாது. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. அதிமுக பேசுவதற்கு எதுவும் கிடையாது. எவ்வாறு இறந்தார்கள் என்பதை ஆராய வேண்டும்” என்றார்.


