“ஜெ.வின் வீட்டையே பாதுகாக்க முடியாத பழனிசாமிக்கு சட்ட ஒழுங்கை பற்றி பேசுவதற்கு யோகிதை இல்லை”- ஆர்.எஸ்.பாரதி
ஜெயலலிதாவின் வீட்டையே பாதுகாக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி சட்ட ஒழுங்கை பற்றி பேசுவதற்கு யோகிதையே இல்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை டவுன் மேற்கு மாநகர திமுக செயலாளர் அலுவலகத்தில் 48 பேர் இரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “நான்கரை ஆண்டு காலத்தில் எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்து உள்ளோம் என்பது அனைவருக்குமே தெரியும். முழுமையான பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல நயினார் நாகேந்திரன் புதிதாக பாஜகவில் போய் சேர்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்ற நினைக்கிறார். அவர் அல்ல, யார் வந்தாலும் தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்ற முடியாது. அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அயோத்தியிலே அவர்கள் கட்சி தோற்றுப் போய் உள்ளது. அயோத்தியில் கோயில் கட்டியதை பெரிதாக பேசுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று அவர்கள் கூட்டணி தோல்வியடைந்துள்ளது. பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று மோடி முகத்தில் கரியை பூசி இருக்கிறார்.
நெல்லையில் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. இஸ்லாமியர்களை இந்துக்கள் மாமா என்று அழைக்கிறார்கள். அதேபோல் தான் ஒவ்வொரு ஜாதியை சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்களை அழைக்கிறார்கள். இப்படி பாரம்பரிய மண்ணிலே நாட்டை அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார் என்றால் அவர் போய் சேர வேண்டிய இடமே வேறு. இப்படிச் சொன்னவர்கள் பல பேரின் நாட்கள் முடிந்துவிட்டது.எங்கள் கட்சி வளமாக இருக்கிறது. 2 கோடியே 70 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். மொத்த வாக்காளர்களை 5 கோடி பேர் தான். அதில் 2.70 கோடி பேர் திமுகவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். புதிதாக கட்சியில் சேருபவர்களை வரவேற்போம். திமுகவில் இருந்து யாரும் வெளியில் செல்லவில்லை. எடப்பாடி ஆட்சியில் நடக்காததா? பொள்ளாச்சியில் பெண் குழந்தைகள் ஐயோ ஐயோ என்று கத்தியதை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா? அவருடைய ஆட்சியில் தான் அமைதியே இல்லாமல் இருந்தது. அவருடைய ஆட்சியில் அவர்களின் அம்மாவின் சொத்துக்களையே பாதுகாக்க முடியாதவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. கோடநாட்டை அவரால் காப்பாற்ற முடியவில்லை. சட்ட ஒழுங்கை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு யோகிதை இல்லை. ஜெயலலிதாவின் வீட்டையே அவர்களால் காப்பாற்ற முடியாதவர்கள் இதைப்பற்றி பேச யோகிதை இல்லை” என்று கூறினார்.


