குடிப்பவர்கள் இல்லையெனில் டாஸ்மாக் கடைகள் தானாக மூடப்பட்டுவிடும்- ஆர்.எஸ்.பாரதி

 
ட்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து மகளிர் மற்றும் விசிக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விசிகவின் மாநாட்டில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். மகளிரை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் உள்ள நெருக்கத்தை யாராலும் உடைக்க முடியாது. விசிக மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்தவுடன் சில ஓநாய்கள் அரசியலில் கூடுவிட்டு கூடு பாய்பவர்கள், ‘திருமாவளவன் கிளம்பிவிட்டார் கூட்டணி இருக்காது’ எனக் கூறினர். மது ஒழிப்பு மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது சிலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். இப்படியொரு மாநாட்டை கூட்டுவதற்கு துணிச்சல் வேண்டும். அதை செய்த திருமாவளவனுக்கு திமுக-வின் பாராட்டுகள். 

விசிக மாநாட்டுக்கு  வந்திருக்கும் ஒவ்வொரு சிறுத்தையும் 10 பேரை மது பழக்கத்திலிருந்து மனமாற்றம் செய்ய உறுதி ஏற்க வேண்டும். அப்படி செய்தால் மதுக்கடைகளை மூடவே வேண்டாம். கடைகளெல்லாம் தானாக மூடிவிடும். குடிப்பவர்கள் இல்லையெனில் டாஸ்மாக் கடைகள் தானாக மூடப்பட்டுவிடும்” என்றார்.