பழனிசாமிக்கு திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை- ஆர்.எஸ்.பாரதி

 
rs bharathi edappadi palanisamy rs bharathi edappadi palanisamy

சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 

EPS anger against DMK misplaced, says RS Bharathi

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி  வெளியிட்டுள்ள அறிக்கையில், “1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை! ரூ.10,160.63 கோடியில் 662 கோடி முறை பயணம் பெண்கள் விடியல் பயணம்! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மூலம்  ரூ.721 கோடி வழங்கப்பட்டு 4,83,000 கல்லூரி மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்! இவ்வாறு மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விழி பிதுங்கி, தனது டெல்லி எஜமானர்களின் வழியில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளிக் கொண்டுவந்து அரசியல் செய்யப் பார்க்கிறார் பழனிசாமி.

நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் பழனிசாமி! திமுக மக்களிடம் அடைந்துள்ள செல்வாக்கால், 2026 தேர்தலில் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்விதான் என்னும் வயிற்றெரிச்சலில், வடிகட்டிய பொய்களைத் திரட்டி புலம்பியிருக்கிறார் புலம்பல் சாமி! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நிர்வாகத்திறனால் இன்றைக்கு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். பழனிசாமி ஆட்சியில் 2019-2020 ஆண்டில் 3.25 விழுக்காடு என அதல பாதாளத்தில் விழுந்துக் கிடந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2024-25 ஆம் ஆண்டில் 9.69 விழுக்காடாக உயர்த்தி இந்தியாவிலேயே நம்பர்-1 மாநிலமாக உயர்த்தியுள்ளார். இந்த திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்துக் குற்றம் சொல்வதற்குக் கேடுகெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு அருகதை இல்லை.

அதிமுக ஆட்சியின் கையாலாகத்தனத்திற்குச் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு 200 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொடூரமே சான்று! பழனிசாமியின் ஆட்சியில் சென்னை மாநகரம் பருவ மழைக் காலத்தில் மிதந்து தத்தளித்தது என்பதைப் பாதக ஆட்சி நடத்திய பழனிசாமி மறக்கலாம்! மக்கள் மறக்கமாட்டார்கள்! மழைநீர் வடிகால் பணிகளில் திராவிட மாடல் அரசின் பணிகள் சிறப்பாக இருந்தன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சென்னையில் எவ்வளவு கனமழை பெய்தபோதும் எந்த இடத்திலும் நீர் தேங்காத வகையில் உட்கட்டமைப்பை உயர்த்தியிருக்கிறோம் என்பது உலகிற்குத் தெரியும். வெறுப்பில் பிதற்றி திரியும் பழனிசாமியின் காமாலைக் கண்களுக்குத் தெரியாமல் போவதில் வியப்பில்லை. ஆவடி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் அற்ப நோக்கில், அந்தக் காவலரை நேற்றைய தினமே உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்ததை மறைத்து விட்டு, பேட்டி என்ற பெயரில் அரசியல் நாடகமாடிச் சென்றுள்ளார் அற்ப பேர்வழி பழனிச்சாமி.

Junior Vikatan - 25 June 2023 - செந்தில் பாலாஜியை அப்படித்தான்  பாதுகாப்போம், என்ன தவறு? - கேள்வி கேட்கும் ஆர்.எஸ்.பாரதி | DMK Organizing  Secretary RS Bharathi interview - Vikatan

இப்படி கதை கதையாக அடித்து விட்டு அதை தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா? எங்கள் காதுகளும் பாவம் இல்லையா? தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் “எவராக இருந்தாலும்” சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி இது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கிற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு மரணப் படுக்கையில் இருந்தது. தமிழ்நாட்டுன் மனசாட்சியை உறைய வைத்துப் பொள்ளாட்சி கொடூரம்! பேராசிரியரே மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குள் தள்ளப் பார்த்த நிர்மலாதேவி விவகாரம்! சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்! இவ்வாறு பட்டியிட ஆரம்பித்தால் பக்கங்கள் பத்தாது, தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாப்பில்லாமல் அச்சுறுத்தல் மிக்கச் சூழலில் வைத்திருந்ததுதான் அதிமுகவின் அவல ஆட்சி.

பரமக்குடி இமானுவேல் சேகரன் குருபூஜையில் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொலை! காவல் ஆய்வாளர் ஆல்பில் சுதன் சமூக விரோதிகளில் குத்திக் கொலை! மரக்காணத்தில் நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதம், தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் சூறையாடி தீ வைப்பு! தூத்துக் குடி கீழ வல்லநாட்டில் கல்லூரி முதல்வர் சுரேஷ் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொலை! இளம் பெண் சுவாதி பட்டப் பகலில் ரெயில்வே நிலையத்தில் வெட்டிக் கொலை! கூடங்குளம் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் மீது ஈவிரக்கமற்ற அடக்குமுறைகள்! சாதி ஆணவக் கொலைகள்! சல்லிக் கட்டுப் போராட்டத்தில் காவல்துறையே வாகனங்களுக்குத் தீவைத்த அவலம்! நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த சாத்தன் குளம் தந்தை- மகன் காவல் நிலைய மரணம்! மிகக் கொடுரமாக நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் துப்பாக்குச் சூட்டில் 13 பேர் மரணம்! இவ்வாறு சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமி, திராவிட மாடல் அரசை பார்த்துக் குற்றம் சொல்வதற்கு தகுதி இல்லை. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சீரழிந்து போயிருந்த சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தி நிலையான ஆட்சியை வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்படுகிறார்கள். கடந்த 4 ஆண்டுக் காலத் திமுக ஆட்சியில் தொடர்ந்து தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில்தான் கொலை சம்பவங்கள் குறைவாக நடந்திருக்கின்றன.கொலை குற்ற விகிதம் ஒரு இலட்சம் மக்களுக்கு தேசிய சராசரி 2.2 என்றால், தமிழ்நாட்டில் அது 1.1 ஆகக் குறைந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை விட மிகத் தீவிரமான நடவடிக்கைகள் திமுக ஆட்சியில்தான் உறுதியாகவும் விரைவாகவும் எடுக்கப்படுகின்றன.அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ரவுடிகள் 1,929 பேர் என்றால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 3,645 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். A மற்றும் A+ ரவுடிகளின் எண்ணிக்கை 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. நான்காண்டு காலத் திராவிட மாடல் ஆட்சி மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு பொறுக்காமல் பிதற்றும் பழனிசாமியின் கபட நாடகங்கள் மக்களிடம் ஒருநாளும் வெற்றிப் பெறாது.சரித்திரம் போற்றும் சாதனைகளைத் தந்துள்ள நான்காண்டு திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் தொடரப் போகிறது என்ற உண்மையை ஏற்க முடியாமல் அவதூறுகளை அள்ளி வீசி வரும் பழனிசாமியின் முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் தோற்கடித்துக் கரியைப் பூசப் போவது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.