“2026 சட்டமன்ற தேர்தல் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும்”- உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 234 தொகுதிக்கு 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற முதல்வரின் இலக்கை அடைய கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மகள் அகஸ்டி மேரிஸ் பிரியங்கா - விற்கும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மீனவர் அணி தலைவர் ஆன்டனி ராஜ் மகன் ஆன்றோ அஷின் - க்கும் இன்று நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கங்கா கிராண்ட்யூர் திருமண மண்டபத்தில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, மற்றும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கீதா ஜீவன், உணவுக் கழகத் தலைவர் சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மணமக்களை வாழ்த்திய பின் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திமுகவில் இளைஞர் அணி எவ்வளவு முக்கியமோ, அது போன்று மீனவரணியும் முக்கிய அணியாகும். 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சொன்ன 234 க்கு 200 தொகுதி வெற்றி இலக்கை அடையவேண்டும். குமரி மாவட்டத்தில் அனைத்து தொகுதி வெற்றி பெற உழைக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். குழந்தைக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


