2026 ஏப்ரலுக்கு பிறகு திமுக ஆட்சி இருக்காது: ஹெச்.ராஜா..!

 
1

கும்பகோணத்தில் உள்ள ஒப்பிலிப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள இந்து கோயில் சொத்துகள் மற்றும் ஏழை மக்களின் நிலங்களை அபகரிக்கும் சட்டமாக வக்பு வாரிய சட்டம் இருக்கிறது. 1996-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு முன்பு, வக்பு வாரியத்துக்கு 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. தற்போது அது 12.40 லட்சம் ஏக்கராக மாறியுள்ளது. லட்சக்கணக்கான கோடி மதிப்பிலான வக்பு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டு முஸ்லிம் சமுதாயத்திடம் ஒப்படைப்போம். வக்பு சொத்துகள் என்றால், உங்களுக்காக நானே போராடுவேன்.

 

திமுகவினரை முஸ்லிம்கள் நம்பக்கூடாது. 2026-ம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு இருக்கப் போவதில்லை. வக்பு திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவே வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

 

புதுக்கோட்டை, திருவாரூரில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைகள் மரத்தடியில் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள 14,500 பள்ளிகளை பிஎம்ஸ்ரீ திட்டம் மூலம் மேம்படுத்த கட்டிடங்கள், கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான நிதியாக ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை பிரதமர் மோடி வழங்குகிறேன் என்று தெரிவித்தால், அதை வேண்டாம் எனக் கூறிவிட்டு, மரத்தடியில் வகுப்பறைகளை நடத்துகின்றனர். எனவே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும்.

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய ரவுடித்தனத்துக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது வழக்கு தொடர வேண்டும். பாஜக கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அவர்கள் கூறுவதை தமிழக பாஜகவினர் அப்படியே செயல்படுத்துவோம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அதனால், தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.