திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள்! உலகையே திரும்பி பார்க்கவைத்த கருணாநிதியின் மும்முனை போராட்டம்
திமுகவில் அண்ணாத்துரை , ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், என். வி.நடராஜன், மதியழகன் ஆகியவர்கள் மட்டுமே 'ஐம்பெரும் தலைவர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்கள். 18.9.1949-ல் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட 28 பேர் பட்டியலில் , மு.கருணாநிதியின் பெயர் கடைசியாக இருந்தது. திமுகவை துவக்கியவர்களில் ஒருவராக கருணாநிதி இருந்தாலும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக அவர் இல்லை. அப்படி இருக்க.. தற்போது அந்த ஐம்பெரும் தலைவர்களோ, அவர்களது வாரிசுகளோ திமுகவில் இல்லை.
அண்ணாத்துரை தனது வளர்ப்பு மகன்களான டாக்டர். பரிமளம், இளங்கோவன், ராஜேந்திரன் யாரையுமே கட்சிப் பக்கமோ, ஆட்சிப் பக்கமோ அனுமதிக்கவில்லை. அண்ணாத்துரைக்கு பிறகு, மருத்துவர் பட்டம் பெற்ற பரிமளத்தை திமுக பக்கமே அண்டவிடவில்லை கருணாநிதி. 2008 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பரிமளத்தின் வாரிசுகள் மலர்வண்ணன், செளமியன், இளவரசி போன்றோரைப் பற்றி திமுகவினருக்கு தெரியக்கூட வாய்ப்பில்லை. மதியழகன் மீது 1970ல் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் ராஜினாமா செய்தார். மதியழகன் பிறந்த கணியூர் குடும்பத்தை , திராவிட இயக்கத்தின் தலையாய குடும்பம் என்று கூறுவாராம் அண்ணாத்துரை. ஆனால் இன்று அவரது குடும்பத்தில் ஒருவர் திமுகவில் இல்லை. என்.வி.நடராஜன் 1975ல் காலமானார். அவருடைய மகன் என்.வி.என்.சோமு அவருக்கு பிறகு கருணாநிதியின் தலைமையை ஏற்று திமுகவில் இருந்தார்.
1975ல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்ட நெடுஞ்செழியன் திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆர் அரசில் அமைச்சரானார். மறைந்த நெடுஞ்செழியன் மகன் மதிவாணன், பேரன் ஜீவன் போன்றோர் அரசியலில் இல்லை.
ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலில் கலைஞர் இல்லாதது ஏன்?
ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலில் கலைஞரின் பெயர் விடுபடக் காரணம் உண்டு என்கிறது வரலாற்று சுவடுகள்.... 1953-ஜூலை மாதம் 13-ஆம் தேதி தி.மு.க.,வின் செயற்குழு சென்னையில் கூடியது. அதில் 15 ஆம் தேதி மும்முனை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த மும்முனை போராட்டம் என்னவென்றால்.....
1) முதல்வர் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து ராஜாஜியின் வீட்டு முன்பு ஈ.வி.கே.சம்பத் தலைமையில் மறியல் செய்யவேண்டும்.
2) திருச்சி அருகே டால்மியாபுரம் என்று பெயரை இதை மாற்றி மீண்டும் கல்லக்குடி என்ற பெயரையே வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான ரயில் மறியல் போராட்டத்தை கலைஞர் தலைமையில் நடத்த வேண்டும்.
3) தி.மு.க., வின் போராட்டங்களை பிரதமர் நேரு நான்சென்ஸ் என்று கூறி கொச்சை படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டங்களை நடத்தவேண்டும்
என்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்பே அதாவது ஜூலை 14 ஆம் தேதியே அண்ணா, நெடுஞ்செழியன், நடராஜன், ஈ. வெ.கி. சம்பத், மதியழகன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நேரத்தில் கருணாநிதி 13 ஆம் தேதி தலைமறைவாகி 14 ஆம் தேதி திருவாரூர் சென்று அங்கிருந்து திருச்சிக்கு கல்லகுடி சென்று 15-ஆம் தேதி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அங்கேயே கைதாகி அரியலூர் சிறையில் சில நாள் இருந்து தண்டனை உறுதிசெய்யப்பட்டு திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி மும்முனைபோரட்டத்தை இந்தியாவே திரும்பிபார்க்க வைத்தார் கருணாநிதி. இப்படி ஓர் கைது நடந்தபோதே ஐம்பெரும் தலைவர்கள் சொற்றொடர் உருவானது.