திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் (பகுதி-2) : அன்புமணி வெளியிட்ட அறிக்கை..

 
anbumani anbumani


திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் 2வது பகுதியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.  

87 சதவீத வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும், திமுகவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விடியல் எங்கே? என்னும் ஆவணப்புத்தகத்தையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்றுள்ள நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அடங்கிய  பட்டியலை அன்புமணி அறிக்கையாக வெளியிட்டு வருகிறார்.  

 அதன்படி அவர் வெளியிட்டுள்ள 2வது பகுதி பட்டியலில்,  “திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் (பகுதி 2)

21. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் உழவர்கள் நலனுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களை திமுக அரசு இரத்து செய்யும். (வாக்குறுதி எண் & 27)

22. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீத்தேன் வாயு, ஷேல் வாயுத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தால், அவற்றை திமுக அரசு தடுத்து நிறுத்தும். (வாக்குறுதி எண் & 28)

23. ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்வதற்கான சந்தைகள் உருவாக்கப்படும்.  (வாக்குறுதி எண் & 30)

24. உழவர்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றை தனிநபர்களோ, கூட்டாகவோ பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 31)

25. கேரளாவில் செயல்படுத்தப்படுவதைப்போல் தமிழ்நாட்டில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். (வாக்குறுதி எண் & 32)

26. கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகளும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 34)

27. உழவர்கள் உற்பத்தி செய்யும் வாழை, மஞ்சள், மரவெள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள், மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய்வித்துக்கள், தோட்டக்கலைப் பொருட்கள் ஆகிய அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். (வாக்குறுதி எண் & 35)
28. கொடைக்கானல் மன்னவனூரில் 390 ஏக்கர் நிலத்தில் மண்டல தோட்டக்கலை ஆய்வு மையம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 39)

29. சொட்டு நீர் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில், 5 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்த 90% மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 41)

30. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் & 42)

31. விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 43) 

dmk

32. சிறு, குறு விவசாயிகள் 10 பேர் இணைந்து கூட்டுப் பண்ணை முறையில் வேளாண்மை செய்தால் வேளாண் கருவிகள் வாங்க, விலையில் 10% அளவுக்கு மானியமாக ஒருமுறை வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 46) 

33. கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் 10 பேர் இணைந்து நடத்தும் ஆடு மற்றும் கோழி வளர்ப்புப் பண்ணைகளுக்கு- 30 சதவிகித மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 47)

34. கிராமப்புற பெண்களை உறுப்பினராகக் கொண்ட கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் மலர்த் தோட்டம், மீன் வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு போன்ற பணிகளை செய்வோருக்கு 25% மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 48)

35. விவசாயிகள் இயற்கை பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகள் வழங்க, விவசாயிகள், அதிகாரிகள் சுற்றுச்சூழல் வல்லுநர்களைக் கொண்ட வேளாண் மண்டலக் குழுக்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 49)

36. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும். (வாக்குறுதி எண் & 50)

37. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கரில் தோட்டக்கலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்படும். (வாக்குறுதி எண் & 53)

38. தென் தமிழ்நாட்டில் மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 54)

39. சத்துணவு மையங்கள், மாணவர் விடுதிகள், அரசு நிறுவனங்களின் உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கான பால், பழங்கள், காய்கறிகள், வெல்லம், பனை வெல்லம், சர்க்கரை, பருப்புவகை, தானிய வகை ஆகியவற்றை  கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக மட்டுமே வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 55)

40. பனை வெல்லத்தை மாவட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 56)” என்று குறிப்பிட்டுள்ளார்.