வருடத்திற்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கும் எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் பற்றி தெரியுமா ?
எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் என்றால் என்ன?
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி படித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக எல்ஐசி என அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட உயர்கல்வி உதவித்தொகை திட்டம் தான் எல்ஐசி கோல்டன் ஜூபிலி உதவித்தொகை திட்டம் (LIC Golden Jubilee Scholarship Scheme).
இந்த திட்டத்தின் மூலம் அரசு அல்லது தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ போன்ற துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த உதவித்தொகையானது மாணவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுகிறது.
எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் குறிக்கோள்
அரசு அல்லது தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் படித்துக் கொண்டு இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி, அதன் மூலம் அவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதே எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், இந்த உதவித்தொகை உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி செலவுகளை ஈடுகட்டுகிறது.
எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் முக்கிய நன்மைகள்
இந்த திட்டத்தின் கீழ் பொது உதவித்தொகை மற்றும் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித்தொகை என இரண்டு வகையான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
பொது உதவித்தொகை: இந்த உதவித்தொகையானது 10 அல்லது 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களை பெற்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், பல்கலைகழகங்களில் மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு, அல்லது ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது படிப்பு முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித்தொகை: இந்த உதவித்தொகையானது பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று 12 ஆம் வகுப்பு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், நிறுவனங்கள் அல்லது தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் தொழிற்கல்வி அல்லது டிப்ளமோ படிப்புகளில் உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
எல்ஐசி கோல்டன் ஜூபிலி கல்வி உதவித்தொகை எவ்வளவு?
அ) மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், பிஏஎம்எஸ், பிஹெச்எம்எஸ், பிடிஎஸ் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.40,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது, தலா ரூ.20,000 வீதம் இரண்டு தவணைகளில் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
ஆ) பொறியியல் துறையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.30,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது, தலா ரூ.15,000 வீதம் இரண்டு தவணைகளில் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இ) ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு, ஒருங்கிணைந்த படிப்புகள், ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.20,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது, தலா ரூ.10,000 வீதம் இரண்டு தவணைகளில் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
ஈ) பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு, தொழிற்கல்வி/டிப்ளமோ படிப்புகளை பயிலும் பெண் குழந்தைகளுக்கு வருடத்திற்கு ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையானது, தலா ரூ.7,500 வீதம் இரண்டு தவணைகளில் மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
எல்ஐசி கோல்டன் ஜூபிலி உதவித்தொகைக்கான தகுதி வரம்புகள்
பொது உதவித்தொகை: இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், சென்ற கல்வியாண்டுகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான CGPA பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தனியார், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு, ஒருங்கிணைந்த படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் போன்றவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை பயின்று கொண்டிருக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித்தொகை: இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் 11, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் வருடத்திற்கு ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு தாய் மட்டும் இருந்து, அவர் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினராக இருந்தால், ஆண்டு வருமான வரம்பு ரூ.2,50,000 முதல் ரூ.4,00,000 வரை தளர்வு வழங்கப்படும்.
எல்ஐசி கோல்டன் ஜூபிலி உதவித்தொகைக்கு யார் தகுதியற்றவர்?
முதுகலை படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். அதேபோல், பகுதிநேர வகுப்புகள், திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஏற்கனவே பிற அறக்கட்டளைகள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகளும் தகுதியற்றவர்கள். இருப்பினும், இந்த உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்போ அல்லது பிறகோ மத்திய அல்லது மாநில அரசிடம் இருந்து உதவித்தொகை பெறும் எஸ்சி அல்லது எஸ்டி மாணவ, மாணவிகள் தகுதியுடையவர்கள்.
குறிப்பு: ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு எல்ஐசி ஜூபிலி உதவித்தொகை வழங்கப்படாது.
எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப்பிற்கு தேவையான ஆவணங்கள்
இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும்.
- வருமான சான்றிதழ்
- வங்கி கணக்கு புத்தகம்
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- சாதி சான்றிதழ்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- மதிப்பெண் பட்டியல்
எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதலில், எல்ஐசியின் https://licindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.முகப்பு பக்கத்தில் LIC கோல்டன் ஜூபிலி உதவித்தொகை என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். ஒரு புதிய பக்கம் தோன்றும், அதில் Apply Here Now என்ற பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது எல்ஐசி கோல்டன் ஜூபிலி உதவித்தொகை விண்ணப்பப் படிவம் திரையில் காண்பிக்கப்படும்.


