இலவச பேருந்து அட்டை, புதிய ரேஷன் கார்டு, ஓய்வூதியம் வேண்டுமா? - தேதி நோட் பண்ணுங்க..!
ரேஷன் கார்டு குறைத்தீர்ப்பு முகாம்கள் எந்தெந்ந மாவட்டத்தில் என்னென்ன தேதியில் நடக்கிறது? என்பதை இங்கே பார்க்கலாம்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், வரும் ஜனவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வட்டார அளவிலான குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில் கீழ்க்கண்ட கிராமங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன:
செங்கல்பட்டு வட்டம்: ஆத்தூர் (கடை குறியீடு: 03DP001PY)
செய்யூர் வட்டம்: நீலமங்கலம் (கடை குறியீடு: 03GP133PY)
மதுராந்தகம் வட்டம்: பள்ளியகரம் (கடை குறியீடு: 03FP060PN)
திருக்கழுக்குன்றம் வட்டம்: மெய்யூர் (கடை குறியீடு: 03EP046PN)
திருப்போரூர் வட்டம்: அனுமந்தபுரம் (கடை குறியீடு: 03HP128PY)
வண்டலூர் வட்டம்: மேலகோட்டையூர் (கடை குறியீடு: 03HP092PY)
என்னென்ன பிரச்சனைகளுக்கு மனு கொடுக்கலாம்?
இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் (Ration Card) உள்ள பின்வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காணலாம்:
- புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் நகல் அட்டைக்கு விண்ணப்பித்தல்.
- குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சேர்த்தல் அல்லது நீக்கம் செய்தல்.
- முகவரி மாற்றம் மற்றும் கைப்பேசி எண் பதிவு/மாற்றம் செய்தல்.
- நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களைப் பதிவு செய்தல்.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்தந்தப் பகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்திலும் இதே தேதியில், அதாவது ஜனவரி 24-ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த முகாம்கள் வரும் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் கீழ்க்கண்ட கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் முகாம் நடைபெறும்:
திருப்பத்தூர் வட்டம்: பலப்பல்நத்தம்.
நாட்றம்பள்ளி வட்டம்: தெக்குப்பட்டு.
வாணியம்பாடி வட்டம்: கொடையாஞ்சி.
ஆம்பூர் வட்டம்: சோலூர்.
என்னென்ன பிரச்சனைகளுக்கு மனு கொடுக்கலாம்?
இந்த முகாமில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் பின்வரும் கோரிக்கைகள் குறித்து நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுக்கள் அளிக்கலாம்:
- குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல்.
- முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல்.
- புதிய குடும்ப அட்டை அல்லது நகல் அட்டை கோருதல்.
- நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள்.
- தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தீர்வு செய்து பயன்பெறுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர்
பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட
வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 13.02.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்ப்பு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநர் கலந்து கொள்கிறார். அது சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளையும், ஆலோசனைகளையும், நேரில் தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விபரங்கள் பெறலாம்.
இக்கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீர்வு செய்யப்படாத குறைகளை தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியர்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விபரம், செல்லிடைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியை தெளிவாகக் குறிப்பிட்டு 30.01.2026 வெள்ளிக்கிழமைக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தவறாது இரண்டு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்
திருவாரூரில் தமிழ்நாடு அரசின் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை அட்டை பெறுவதற்கு (Bus pass) இணையதள இணையதள வாயிலாக விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக 31.01.2026 வரையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, கட்டணமில்ல பேருந்து பயணச்சலுகை பெறுவதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, UDID அட்டை, வேலை பார்க்கும் சான்றிதழ், தொடர் மருத்துவச்சிகிச்சை பெறுபவர் எனில் மருத்துவரின் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -3 ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை அட்டை பெற்று பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


