மினி பால் பண்ணை வைக்க ஆசையா? ரூ.5 லட்சம் கடனும், ரூ.1.25 லட்சம் மானியமும் - முழு விபரம் உள்ளே!
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மற்றும் வங்கிகள் இணைந்து சிறு பால் பண்ணை அமைக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 8 பயனாளிகளுக்குத் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.24 லட்சம் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். இத்திட்டத்தில் 4 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுவதுடன், கறவை மாடுகள் வாங்குவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புவோர் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த மினி பால் பண்ணை திட்டத்தில், ஒரு பயனாளி அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற முடியும். இதில் அரசு தரப்பிலிருந்து 25 சதவீத மானியமாக ரூ.1,25,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் ஏற்கனவே கால்நடை பராமரிப்புத் துறையின் மற்ற திட்டங்களில் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது. மேலும், கறவை மாடுகளுக்குத் தேவையான தீவனப்புல் வளர்க்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பாசன நிலம் பயனாளியின் பெயரில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
பண்ணை அமைப்பதற்கான இடவசதி மற்றும் தகுதிகள் குறித்துப் பார்க்கையில், மாட்டுக்கொட்டகை அமைக்கக் குறைந்தது 300 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும். இதற்கான சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் (மனைவி, கணவன், பெற்றோர், பிள்ளைகள் மற்றும் மருமக்கள்) யாரும் அரசுப் பணியிலோ, கூட்டுறவு நிறுவனங்களிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகவோ இருக்கக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.
விண்ணப்பதாரர் குறிப்பிட்ட கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தை வங்கிக் கடன் மூலம் செயல்படுத்த விரும்புவோர், தங்கள் பகுதி வங்கி மேலாளரை அணுகி 'கடன் வழங்க ஒப்புதல் கடிதத்தை' (Provisional Loan Sanction Letter) பெற வேண்டும். அந்தக் கடிதத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணைத்து, அருகிலுள்ள அரசு கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை இணைப்பது அவசியமாகும்.
இறுதியாக, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு, மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முடிவே இறுதியானது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு உருவாவதோடு, தமிழகத்தின் பால் உற்பத்தியைப் பெருக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்.


