நாளை டாக்டர்கள் வேலைநிறுத்தம் - அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டீன்களுக்கு பறந்த அவசர உத்தரவு..
கொல்கத்தாவில் பயிற்சி மாணவி படுகொலை விவகாரத்தைக் கண்டித்து நாளை மருத்துவ சங்கங்கள் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மருத்துவத்துறை இயக்ககம் அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் ஆக.8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும் நாடு முழுவதும் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள் என்றும், ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் அனைவரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென மருத்துவத்துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
அவசர கால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை எவ்விதமான பாதிப்புகள் ஏற்படாமலும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை கூடுதலாக மருத்துவர்கள் பணியாற்றவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் கண்காணிக்கவும், நோயாளிகள் பாதிக்காதவாறு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தனியார் மற்றும் அனைத்து அரசு பொது மருத்துவமனையின் முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.