விஜய்க்கு அதிமுக வரலாறு தெரியுமா..? - தவெக தலைவருக்கு கடம்பூர் ராஜூ சரமாரி கேள்வி..!

 
1

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர். செ. ராஜீ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, த. வெ. க. கட்சி எத்தனை தேர்தலை சந்தித்து இருக்கிறது. ஒரு உள்ளாட்சித் தேர்தலை கூட அது அந்த கட்சி சந்திக்கவில்லை. அதிமுக வரலாறு தம்பி விஜய்க்கு தெரியாது. அதிமுக கட்சி ஆரம்பித்து ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்த கட்சி அதிமுக. இந்த வரலாறு தம்பி விஜய்க்கு தெரியாது 

த.வெ.க கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. த.வெ.க. யாருக்காகவது போட்டியாக இருந்து விட்டு போகட்டும். எங்களுக்கு யாரும் போட்டி இல்லை. தமிழக தேர்தல் களத்தில் இன்றைக்கு அதிமுகவுக்கு போட்டி யாரும் இல்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. அதனால்தான் அவர்களுக்குள்  சண்டை போடுகின்றனர். நானும் போட்டி நீயும் போட்டி என்று கூறுகின்றனர்.

விஜயை அதிமுகவிற்கும், த.வெ.கவிற்கும் போட்டி என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். சொல்ல மாட்டார். ஏனெனில் அதிமுகவின் சுயரூபம், சுயபலம் என்னவென்று விஜய்க்கு தெரியும். மேடைக்காக சும்மா காமெடி செய்கிறார். விஜய். அவர் காமெடி பண்றத நம்ம சீரியஸா எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சசிகலா கட்சி  தொடங்கப் போவது தெரியாது. அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது ஒரு கட்சியாக உள்ளது. அதிமுகவில் இருந்த போது பல்வேறு பதவிகளை பெற்று பணியாற்றினார். இடையில் எங்களுக்குள் சிறு கருத்து வேறுபாடு வந்த போது அம்மாவின் பேரில் ஒரு கட்சி ஆரம்பித்து ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். பல்வேறு தேர்தலை சந்தித்திருக்கிறார். நாங்கள் எதிரும் புதிருமாகத்தான் இருந்தோம். திமுக ஆட்சி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஒரே ஒரு கருத்தோடு நாங்கள்  ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இன்று இணைந்துள்ளோம்.

இவ்வாறு கடம்பூர் ராஜு பேசினார்.