‘இறுமாப்பு வேண்டாம், ராஜ்பவன் பயிற்சி பட்டறை..’ - மோதிக்கொள்ளும் சு.வெங்கடேசன், தமிழிசை..

 
‘இறுமாப்பு வேண்டாம், ராஜ்பவன் பயிற்சி பட்டறை..’ -  மோதிக்கொள்ளும் சு.வெங்கடேசன், தமிழிசை..


தெலங்கானா  மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கும் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் வெடித்துள்ளது.  

தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் சில நாட்களுக்கு முன்பு  நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்கள் எங்களைப் போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்களையும், திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை.  ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டுள்ளது. தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டிருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி நாடாளுமன்றம் சென்றிருப்போம். மத்திய அமைச்சர்கள் ஆகியிருப்போம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி ஆளுநர்களாக நியமனம் செய்துள்ளது.” என்று கூறியிருந்தார்.  

su venkatesan

இதற்கு பதில் அளித்திருந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரீட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டுவிட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த தமிழிசை, “ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல... அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள். தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.... தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது... ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்... அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே..

Tamilisai

நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்... நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்... இறுமாப்பு வேண்டாம்... ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்... அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை... மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்.: என்று கூறியிருந்தார்.  இந்நிலையில் இதற்கு எம்.பி., சு.வெங்கடேசன் மீண்டும் ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார்.

அதில், “நீங்கள் மக்களை கேவலப்படுத்தியதால் அந்த கேள்வி வந்தது தமிழிசை அவர்களே. நான் டுடோரியலை  கேவலமாக சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு. அதுவே கேள்வி. கேள்வியை விட்டு விட்டு வேறு ஏதாவது பதில் பேசினால் கூட பரவாயில்லை. எந்த தரத்திற்கு இறங்கி பேசியிள்ளீர்கள்?  இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா தமிழிசை அவர்களே! ” என்று பதிவிட்டுள்ளார்.