மிஸ் பண்ணிடாதீங்க..! இலவசமாக தையல் மெஷின் பெற சூப்பர் சான்ஸ்..!

 
1 1

சுயவேலைவாய்ப்பு  மூலம் வருமானத்தை உயர்த்தும் நோக்கில்  தமிழக அரசு இலவச தையல் இயந்திர திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இந்த திட்டம் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் கீழ் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள், முன்னாள் படைவீரரின் மனைவி ஆகியோர்களுக்கு  இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

தனி நபரும் விண்ணப்பிக்கலாம். அல்லது 10 பெண்கள் சேர்ந்து ஒரு குழுவாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம்  அவர்களுக்கு 6 தையல் இயந்திரம் வழங்கப்படும். இதனுடன் ஒரு கட்டிங் மெஷின், ஓவர்லாக் மெஷின் என முழு சாதனங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

என்னென்ன தகுதிகள்?

இலவச தையல் இயந்திர பெற விரும்பும் பெண்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,000 ஆக இருக்க வேண்டும்.  வயது பொறுத்தவரை, பெண்கள் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்களுக்கு தையல் இயந்திரத்தை பயன்படுத்தவும், அது தொடர்பான பயிற்சியையும் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்த திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் இருந்து பொது சேவை மையத்திற்கு தேவையான ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்ப படிவத்தில் உள்ள தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, அதற்கான நகல் மற்றும் விண்ணப்ப எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.  இலவச தையல் இயந்திரம் பெற குடும்ப வருமான நகல், ஆதார், பான் கார்டு, தையல் முடித்ததற்கான சான்றிதழ்,  மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றுகள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். 

குழுவாக தையல் இயந்திரத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதலில் அந்த குழுவுக்காக ஒரு  வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வங்கி கணக்கு தொடங்கிய உடன், பொது  சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை உயர் அதிகாரிகள் சரிபார்த்தவுடன், உங்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும்.   இந்த திட்டம் தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிடும்போது, தகுதியுள்ளவர்கள் ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி அமீர் பாஷா,  20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தையல் தொழில் தெரிந்த பெண்களுக்கு இலவசமாக மோட்டார் இயந்திரம் பொருத்திய தையல் மிஷின் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி,  தையல் தெரிந்த பத்து பெண்கள் ஒன்றாக இணைந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆறு தையல் இயந்திரங்கள் ஒரு கட்டிங் மெஷின் ஓவர்லாக் மிஷின் என அனைத்தும் சேர்த்து முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனை பெறுவதற்கு  பத்து பேர் கொண்ட பெண்கள், குழுவாக இணைந்து அந்த குழுவுக்கென, தனியாக ஒரு வங்கி கணக்கு துவக்க வேண்டும். வங்கி கணக்கு துவங்கியவுடன் ஆதார் எண்ணுடன் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக இந்த சலுகை வழங்கப்படுகிறது.

அதேபோன்று,  சலவை தொழிலாளர்களுக்கு இலவசமாக சலவை பெட்டி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மேம்படுத்தி கொள்ள நினைப்பவர்கள்,  10 பேர் கொண்ட குழுவாக இணைய வேண்டும். அவர்களுக்கும் மூன்று லட்சம் மதிப்புள்ள சலவைத் தொழில் செய்யும் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பத்து பேர் கொண்ட குழுக்கள் மட்டுமல்லாமல், ஐந்து பேர் கொண்ட குழுக்களாகவும், இணைந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள சலவையகம் அமைக்க தேவையான பொருட்களை பெரும் வாய்ப்பும் உள்ளதாக அதிகாரி அமீர் பாஷா தெரிவித்தார். இந்த திட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளதால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அதிகாரி அமீர்பாஷா தெரிவித்தார். இதற்கும் குழுவாக இணைந்து நேரில் சென்று விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்படுவதாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி அமீர் பாஷா தெரிவித்தார்.