தமிழ்நாட்டு மண்ணில் விஷச்செடிகளை வளர்க்க எண்ணாதீர்கள் - ஆளுநரை சாடிய முரசொலி..

 
தமிழ்நாட்டு மண்ணில் விஷச்செடிகளை வளர்க்க எண்ணாதீர்கள் - ஆளுநரை சாடிய முரசொலி..


தமிழ் நாட்டு மண்ணில் சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச் செடிகளை வளர்க்க எண்ணி விஷமத்தனங்களில் ஈடுபடாதீர்கள்!" என  ஆளுநர் ரவி குறித்து முரசொலி விமர்சித்துள்ளது.

 ‘தமிழ்நாடு ஆளுநரின் சேடிச மனப்பான்மை’ என வெளியிடப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில்,  தமிழ்நாட்டின் ஆளுநர் ரவியை நினைத்தால் சிரிப்பதா? கோபப்படுவதா ? என்றே தெரியவில்லை ஆடு திருடிய திருடன் என்பார்களே  அதுபோல அவர் அகப்பட்டு முழிப்பதை நம்மால் உணர முடிகிறது.  எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கும் முந்திரிக்கொட்டைத்தனத்தால் அவர், தான் வகிக்கும் பதவியை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு எத்தனையோ ஆளுநர்களை பார்த்து உள்ளது.  ஆனால் இன்றைய ஆளுநர் ரவி போல எத்தனை சூடு பட்டாலும் திருந்தாத ஜென்மங்களாக யாரும் இருந்ததில்லை என்று கடுமையாக சாடி உள்ளது. ஆளுநர், எல்லாவற்றிலும் தலையிட்டு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்.  தனது அதிகார வரம்பு என்ன என்பது அறியாது முடிவெடுக்கிறார் என்றும்,   பிறருக்கு தொல்லை தந்து இன்பம் காணும் ‘சேடிச’த்தனம் தான் அவரது செயல்களில் பெருமளவு பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளது. 

திமுக

அமலாக்கத்துறை சோதனைக்கு முன்பே செந்தில் பாலாஜியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் கடிதம் எழுதியதாக அமைச்சர் பொன்முடி அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.  அப்படி ஒரு கடிதத்தை முதலமைச்சருக்கு ஆளுநர் எழுதினார் என்பது,  ஆளுநர் ரவி அரசியல் சட்டம் ஆளுநர்களுக்கு அளித்து அதிகார வரம்பை உணராது செயல்படுகிறார் என்பதை காட்டவில்லையா?  என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

“சிலருக்கு எதையாவது குத்தி குதறிக்கொண்டே இருப்பதில் ஒருவித ஆனந்தம்;  அதனை தான் சேடிசம் என்று கூறுவார்கள். நமது தமிழ்நாட்டு ஆளுநரின் நடவடிக்கைகளை காணும் போது இதுதான் நம் நினைவுக்கு வருகிறது.  தந்தை பெரியார்,  பேரறிஞர் அண்ணா,  முத்தமிழ் அறிஞரால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ்நாட்டு மண்;  இங்கே சனாதனம் வர்ணாசிரமம் எனும் விஷ செடிகளை வளர்க்க எண்ணி விஷமத்தனங்களில் ஈடுபடாதீர்கள்;  இது திராவிட மண்.  நடப்பது திராவிட மாடல் ஆட்சி; இதை நடத்துபவர்கள் கொள்கை மறவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது..