"திமுகவை நம்பாதீங்க, நம்ப வைத்து ஏமாற்றுவார்கள்" - புதுச்சேரி கூட்டத்தில் விஜய் ஆவேசம்!
இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர், "என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான்," என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார். மேலும், புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாகத் தன்னைத் தாங்கிப் பிடிப்பதாகவும், தமிழகத்தைப் போலவே புதுச்சேரிக்கும் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.
தமிழக அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டிய விஜய், "தமிழக அரசு போல் புதுச்சேரி அரசு கிடையாது. நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர். புதுச்சேரி முதல்வருக்கு நன்றி. இதைப் பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்," என்று பேசினார். மேலும், கூட்டணியில் இருந்தபோதும் புதுச்சேரி அரசை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிய விஜய், மூடப்பட்ட ஆலைகளைத் திறக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, காரைக்கால், மாஹி, ஏனம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை என்று குறிப்பிட்டார். புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் இரயில் திட்டம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி மக்களிடம் பேசிய அவர், "திமுகவை நம்பாதீங்க. நம்பவைத்து ஏமாற்றுவார்கள்," என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி இடம்பெறாததால் போதிய நிதி கிடைக்கவில்லை, கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது என்றும் கூறினார்.
மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான் என்றும், மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் ரேஷன் கடைகளைத் தொடங்கி மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம்," என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.


