‘மருத்துவர் ராமதாஸ் எண்ணமும் , திருமாவளவன் எண்ணமும் ஒன்று தான்’.. பாமக, விசிக தான் ஆட்சிக்கு வரனும் - அன்புமணி
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்க வேண்டும் இல்லை என்றால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து தான் என மதுரையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
மதுரையில் பழங்காநத்தம் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஆட்சி அதிகாரம் வரவதற்கு முன்பாகவே, பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது பாமக. ஆட்சி அதிகாரம் இல்லாமலே பல சமூக பிரச்சினைகளை தீர்வு கண்டு உள்ளது பாமக. முதல்வராக இருந்து கொண்டு , திட்டங்களுக்கு கையெழுத்து போடுவது பெரிய சாதனை இல்லை.
ஆனால் முதல்வர்களை கையெழுத்து போட வைப்பது தான் பாமக. சமூக நீதி போராளி பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸை , பிரதமரே பாராட்டி உள்ளார். சமுதாயங்களை பிரித்து சூழ்ச்சி செய்வது தான் திராவிட கட்சிகள் சமுதாயங்களை பிரித்து சூழ்ச்சி செய்வதில் PHD பட்டம் பெற்ற கட்சி திமுக. நாங்கள் எல்லா சமுதாயத்திற்கும், மதத்திற்கும், அனைத்து தரப்பினருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உள்ளோம்.
சமூக நீதி தான் எங்கள் மைய கருத்து. ஆனால் எங்களை சாதி கட்சி என சில கட்சியினர் கூறுகின்றனர்.சமுதாயத்திற்கு இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஆனால் குடியை கொடுக்கின்றனர். இன்று இளைஞர்கள் உள்பட பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகி விட்டனர். குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டு உள்ளனர். 5 ஆண்டுகள் எங்களுக்கு ஆட்சியை கொடுத்து பாருங்கள். எண்ணற்ற திட்டங்களை வைத்து உள்ளோம்; நிறைவேற்றுவோம்.
ஆனால் சுற்று சூழல், சுகாதாரம் குறித்து எதுவுமே தெரியாத நபர்களிடம் ஆட்சியை மக்கள் கொடுக்கிறீர்கள். மலையை அழித்து டீ எஸ்டேட் போடுகின்றனர். அதனால் தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லை. ஒரு முறை எங்களிடம் ஆட்சியை கொடுங்கள். கொடுத்தவர்களிடம் ஆட்சியை மீண்டும் , மீண்டும் ஆட்சியை கொடுக்காதீர்கள். பழைய அம்பாசிடர், பியட் கார்களை மாற்றி விட்டு, புது கார்களை மக்கள் வாங்குகின்றனர். அது போல பழைய கட்சிகளை விட்டு விட்டு எங்களை போல புதிய கட்சிகளிடம் ஆட்சியை கொடுங்கள். திமுக, அதிமுக அதே திட்டங்களை பெயரை மற்றும் மாற்று கின்றனர்.
முதல்வர் அமெரிக்கா சென்றார். 17 நாட்கள்.7,600 கோடி ரூபாய் முதலீடு பெற்று வந்ததாக கூறினார். தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநில முதல்வர்கள் நம்மை விட அதிகமான முதலீடு பெற்று வந்து உள்ளனர். 7,600 கோடி ரூபாய் முதலீடில் தென் தமிழகத்திற்கு வந்த முதலீடு 50 கோடி ரூபாய். 3 ஆண்டுகளில் ,10, லட்சம் கோடி முதலீடு வந்து உள்ளதாக பொய் சொல்கிறார் முதல்வர். ஆனால் MOU மட்டுமே. முதலீடு வந்தது குறைவு தான்; முதலீட்டுக்கும், MOU கையெழுத்துக்கும் வித்தியாசம் உள்ளது.
திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? மக்களுக்கு என்ன செய்தார்கள் என ஒவ்வொரு மக்களும் கேட்க வேண்டும். தென் மாவட்டங்களில் கனிம கொள்ளை நடந்து வருகிறது. கனிமங்கள் தடையின்று கேரளா செல்கிறது. ஆனால், இதே நிலை நீடித்தால் வயநாடு போல் குமரியும் அழிந்து விடும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
45 ஆண்டுகாலமாக, மதுவை ஒழிக்க வேண்டும் என பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் போராடி வருகிறார். அனைத்து கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என இன்று திருமா வளவன் உள்பட அனைத்து கட்சிகளும் பேசுகின்றனர். அதற்கு அடிப்படை காரணமே பாமக தான். கனிமொழி அவர்களே ஏன் மது ஒழிப்பு குறித்து தற்போது ஏன் பேசாமல் மவுனமாக உள்ளார். இதற்கு ஏற்ற சூழல் திமுகவில் இல்லை. முதல்வரை சுற்றி உள்ள 5 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களை மீறி ஒன்றும் நடக்காது. அவர்கள் அமைச்சர் போல் அல்லாமல் வணிகர்கள் போல் செயல்படுகின்றனர். மது விற்பனையை 55 ஆயிரம் கோடி என இலக்கு வைத்து மது விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு 40/40 கொடுக்கிறீர்கள்.
கல்வி தந்தை காமராஜர் மட்டும் இல்லை எனில் இன்று கல்வி கற்க முடியாது. பல்வேறு அனைகளை கட்டியவர். திராவிட கட்சிகள் அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றி பெறலாம் என திட்டமிடுகின்றனர். எப்படி கொள்ளை அடிக்கலாம் என திட்டமிடுகின்றனர். தமிழ் நாட்டின் விவசாய பயண்பாடு நிலம் குறைந்து உள்ளது. நதிகளை காப்பாற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழ்நாட்டை பீகாரோடு ஒப்பிடு கூடாது. சிங்கப்பூரோடு ஒப்பிட வேண்டும். மது ஒழிப்பு கோரி நாங்கள் பல மாநாடுகள் நடத்தி உள்ளோம், இந்தியாவுக்கே முன் உதாரணமாக உள்ளோம். பட்டியலின மக்களுக்காக பாடு படும் கட்சி பாமக. திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் சமூக நீதி இல்லை. கட்சியின் தலைவர், பொருளாளர், பொது செயலாளர் என ஆகிய பதவிகளில் பட்டியலினத்திற்கு திமுக கொடுத்து உள்ளதா? பாமக கொடுத்துள்ளது.
அம்பேத்காருக்கும், திமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது. தலைவர் ராமதாஸ் வீட்டில் அம்பேத்கர் சிலை வைத்து உள்ளோம். மத்திய அமைச்சர் பதவியை பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது 1998 ஆண்டு. பாமக சமூக நீதிக்கான கட்சி. எங்களை பார்த்து சாதிய கட்சி என கூறுகின்றனர். விசிக திருமாவளவன் இதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் 6 வித இட ஒதுக்கீடுகளை பெற்று தந்தவர் மருத்துவர் ராமதாஸ். அருந்தியர், இஸ்லாமியர் உள்ளிட்டோருக்கு உள் இட ஒதுக்கீடு பெற்று தந்தது பாமக. எங்கள் , மருத்துவர் ராமதாஸ் எண்ணமும் , திருமவளவன் எண்ணமும் ஒன்று தான். ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவது. ஆனால் வெவ்வேறு பாதைகளில் சென்று விட்டனர். திமுக வை நம்பினால் திருமாவுக்கு பட்டை நாமம் தான்
தமிழக அமைச்சர் அவை பட்டியலில் PROTOCOL படி கடைசியாக உள்ள 4 அமைச்சர்களின் பெயர்கள் இடங்களில் பட்டியலினத்தவர்கள் தான் உள்ளனர், இது தான் சமூக நீதியா. பாமக, விசிக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். ஒன்று சேர வேண்டும். ஜாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கிராம ஊராட்சி தலைவருக்கு கூட சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது. ஆனால் திமுக. முதல்வருக்கு அதிகாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல. பல மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து உள்ளது. 69.சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வில்லை எனில், 69.சதவீதம் இட ஒதுக்கீடு ரத்தாகி விடும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு வரும் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வில்லை என தகவல் தெரிவித்தால், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு ரத்தாகிவிடும்; அவ்வாறு ரத்தானால், அன்று மாலையே திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.