நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

 
voters

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. சென்னையில் 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டார்.

voters

வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி 4,5,6,8,9,10,13 ஆகிய மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர், தங்களது குடும்பத்தினர் பெயர் குறித்து விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். சென்னையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 40.54 லட்சம். ஆண்கள் - 19.92 லட்சம், பெண்கள் - 20.80 லட்சம். மூன்றாம் பாலினத்தவர்கள் 1073 பேர் இருக்கின்றனர். வரைவு பட்டியலில் 22,492 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 25,515 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக வேளச்சேரி உள்ளது. அங்கு 3.15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. அங்கு 1.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 13,14,27 மாற்றும் 28ல் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.