#Breaking "திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

 
tn

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டு திருவிழாவின்போது சென்ற தலித்   இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதர சமூகத்தினரை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக இந்த நிலைமையை ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அத்துடன் மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு இந்து  ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிக்காதது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள இந்த கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினரை வழிபடுவதற்கு அனுமதிக்காமல் மறுப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

Villupuram melpadi draupadi amman temple issue complaint to district collector

இந்த பிரச்சினையை சுமுகமாக முடிப்பதற்காக மயிலம், விக்கிரவாண்டி ,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்களும் ,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளீட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 7ஆம் தேதி விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயிலில் பட்டியலின மக்கள் வழிப்பட எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும்  பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில்  கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


high court

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரர் அறநிலையத்துறை அணுகலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஒரு பிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறி சீல் வைக்கப்பட்ட நிலையில் பூஜை செய்வதற்காக மட்டும் கோயிலை திறக்க கூடிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.  விசாரணை நடந்து வருவதால் இந்த விவகாரத்தில் அறநிலையைத் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  இதன் மூலம் பூஜை செய்வதற்காக மட்டும் கோயிலை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.