முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் டி.ஆர்.பி.ராஜா..

 
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் டி.ஆர்.பி.ராஜா..

தமிழகத்தில் புதிய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்று  3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில் நேற்று,  பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது அரசியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும், அமைச்சரவையில் புதிதாக மன்னார்குடி எம்.எல்.ஏவும், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான  டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி. ராஜா நாளை (11-ந்தேதி) காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். அவர் பதவி ஏற்ற பிறகே அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும்.

trb raja

முன்னதாக அமைச்சராக அறிவிக்கப்பட்டதற்கு டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,  “என்னை வளர்த்து ஆளாக்கிய நவீன தமிழகத்தின் சிற்பி தலைவர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றி எங்கள் குடும்பத் தலைவர் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் ஆருயிர் சகோதரர் உதயநிதி ஸ்டாலின்  அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  இதனைத்தொடர்ந்து, நாளை அமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று டி.ஆர்.பி.ராஜா வாழ்த்து பெற்றுக்கொண்டார்.